என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சீரமைப்பு பணி"
- குகன் படகை ரூ.30 லட்சம் செலவில் சீரமைக்க பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழகம் முடிவு செய்தது.
- கோடை விடுமுறை சீசனையொட்டி படகு உடனடியாக சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டுக்காக இயக்கப்பட்டது.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும் அதன் அருகில் உள்ள இன்னொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டுள்ளது. இவற்றை தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்து வருகிறார்கள்.
இந்த நிலையில் திருவள்ளுவர் சிலைக்கும், விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கும் இடையே கண்ணாடி இழை கூண்டு பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதையொட்டி கடந்த 10 மாதங்களாக திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து இயக்கப்பட்டவில்லை. இதற்கிடையில் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இயக்கப்பட்டு வந்த பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகளில் குகன் படகு பழுதடைந்த நிலையில் இருந்ததால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அதனை சின்ன முட்டம் துறைமுகத்துக்கு கொண்டு சென்று கரையேற்றி சீரமைப்பு பணி நடத்தப்பட்டது. பின்னர் அந்த படகு சீரமைப்பு பணி 3 நாட்களில் முடிக்கப்பட்டு கடந்த நவம்பர் மாதமே கடலில் வெள்ளோட்டம் விடப்பட்டு சுற்றுலா பயணிகளின் பயன் பாட்டுக்கு வந்தது.
இதற்கிடையில் தற்போது கோடை விடுமுறை சீசன் தொடங்கி உள்ளதைத் தொடர்ந்து அதே குகன் படகை ரூ.30 லட்சம் செலவில் சீரமைக்க பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழகம் முடிவு செய்தது. இதைத்தொடர்ந்து குகன் என்ற சுற்றுலா படகு கன்னியாகுமரியில் உள்ள பூம்புகார் கப்பல் போக்குவரத்துகழக படகுத்துறையில் இருந்து கடந்த பிப்ரவரி மாதம் 15-ந்தேதி கடல் வழியாக சின்னமுட்டம் துறைமுகத்தில் உள்ள படகு கட்டும் தளத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அந்த படகு கரையேற்றப்பட்டு சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வந்த இந்த சுற்றுலா படகு சீரமைக்கும் பணி கடந்த 15-ந்தேதி முடிவடைந்தது.
இதைத்தொடர்ந்து அந்த படகு புதுப்பொலிவுடன் அன்று மதியம் கடலில் இறக்கப்பட்டது. பின்னர் சின்னமுட்டம் துறைமுகத்தில் இருந்து கடல் வழியாக அந்த படகு அன்று மாலை கன்னியாகுமரிக்கு கொண்டு வரப்பட்டது. அந்த படகு பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு துறையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் அந்த படகு நேற்று கடலில் வெள்ளோட்டம் விடப்பட்டு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. சென்னையில் இருந்து வந்த சர்வேயர் இந்த சோதனை ஓட்டத்தை நடத்தினார். அதன்பிறகு கோடை விடுமுறை சீசனையொட்டி அந்த படகு உடனடியாக சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டுக்காக இயக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த குகன் படகு கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு சுற்றுலா பயணிகளை ஏற்றி சென்றது. புதுப்பொலிவுடன் காட்சி அளித்த குகன் படகில் சுற்றுலா பயணிகள் குதூகலத்துடன் பயணம் செய்து விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்டு வந்தனர்.
- சேதமடைந்த கரைகளில் சீரமைப்பு பணிகள் தற்போது நடை பெற்று வருகின்றன.
- ஏரியில் போதுமான தண்ணீர் உள்ளதாலும் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீரை பெறவில்லை.
ஊத்துக்கோட்டை:
சென்னை மக்களின் குடிநீர் தேவையை நிறை வேற்றும் முக்கிய ஏரியாக பூண்டி ஏரி உள்ளது.
இங்கு கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின் படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீர் மற்றும் மழைநீரை சேமித்துவைத்து தேவைப்படும் போது புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு அனுப்பப்படுகிறது.
கடந்த ஆண்டு மிச்சாங் புயல் காரணமாக பலத்த மழை கொட்டி தீர்த்ததால் கிருஷ்ணா கால்வாயில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. இதனால் தமிழக எல்லையான ஊத்துக் கோட்டை அருகே உள்ள தாமரைக்குப்பம் ஜீரோ பாயிண்டில் இருந்து பூண்டி ஏரி வரை 25 கிலோ மீட்டர் தூரத்துக்கு 50க்கும் மேற்பட்ட பகுதிகளில் கிருஷ்ணா கால்வாய் கரைகள் சேதம் அடைந்தன. சேதமடைந்த கரைகளில் சீரமைப்பு பணிகள் தற்போது நடை பெற்று வருகின்றன.
கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின் படி ஆந்திரா அரசு வருடம்தோறும் தமிழகத்துக்கு 12 டி.எம்.சி. தண்ணீரை நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு திறந்து விட வேண்டும்.
ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி., ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி. என 12 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட வேண்டும். கிருஷ்ணா கால்வாய் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதாலும், ஏரியில் போதுமான தண்ணீர் உள்ளதாலும் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீரை பெறவில்லை.
மேலும் வெயிலின் தாக்கம் தற்போது அதிகரித்து வருவதால் குடிநீர் ஏரிகளில் தண்ணீர் இருப்பும் வேகமாக குறைந்து வருகிறது.
இந்த நிலையில் வருகிற கோடைமாதங்களில் சென்னை நகரில் குடிநீர் தேவை மேலும் அதிகரிக்கும். இதனை கருத்தில் கொண்டு கிருஷ்ணாகால்வாய் கரை சீரமைப்பு பணிகளை விரைந்து முடித்து கண்ட லேறு அணையில் இருந்து தண்ணீரை பெற திட்டமிட்டு இருப்பதாக பொதுப்ப ணித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3.231 டி.எம்.சி ஆகும். இன்று காலை நிலவரப்படி ஏரியில் 2.580 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு இணைப்பு கால்வாயில் வினாடிக்கு 150 அடி தண்ணீரும், சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாய் வழியாக வினாடிக்கு 15 கன அடி தண்ணீரும் திறந்து விடப்படுகிறது.
- பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் முகாமிட்டனர்.
- காட்டாற்று வெள்ளம் சூழ்ந்து ஆயிரக்கணக்கான கிராமங்கள் தனித்தீவுகளாக காட்சி அளித்தது.
தூத்துக்குடி:
நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17, 18-ந்தேதிகளில் பெய்த வரலாறு காணாத கன மழையால் தாமிரபரணி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சுமார் 1½ லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் சென்றது.
இதன் காரணமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல்வேறு குளங்கள், ஏரிகள், கால்வாய் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி மறுகால் பாய்ந்தது. இதனால் பல்வேறு குளங்க ளில் உடைப்பும் ஏற்பட்டது.
தூத்துக்குடி, கோரம் பள்ளம் உடைந்ததால் மாநகரில் உள்ள ஆயிரக் கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இதே போல் இரு மாவட்டங்களில் காட்டாற்று வெள்ளம் சூழ்ந்து ஆயிரக்கணக்கான கிராமங்கள் தனித்தீவுகளாக காட்சி அளித்தது.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் 515 பாசன குளங்களில் 720-க்கும் மேற்பட்ட இடங்களில் மதகுகள் உடைந்து சேதம் அடைந்தது.
இதைத்தொடர்ந்து சீரமைப்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் தொடங்கியது. தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வெள்ள சேதங்களை நேரில் பார்வையிட்டு மீட்பு மற்றும் நிவாரண பணிகளை துரிதப்படுத்தினர்.
மீட்பு பணிகளுக்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் முகாமிட்டனர்.
எம்.சி. அடி கொள்ளளவு கொண்ட கோரம்பள்ளம் குளத்தில் உடைப்பு ஏற்பட்ட தால் 4 டி.எம்.சி. தண்ணீர் பாயந்தோடியது. வழக்கமாக குளத்தில் இருந்து 30 ஆயிரம் கன அடி தண்ணீர் மட்டுமே வெளியேற்றப்படும் நிலை யில் 46 ஆயிரம் கன தண்ணீர் அங்கிருந்து சென்றது.
இதனைத்தொடர்ந்து மாவட்டம் முழுவதிலும் இருந்து 200-க்கும் மேற்பட்ட நீர்வளத்துறை என்ஜினீயர்கள் இந்த மாவட்டங்களில் சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டனர். இரண்டு மாவட்டங்களிலும் உடைப்பு ஏற்பட்ட 720 பகுதிகளில் மதகுகளை சீரமைக்கும் பணிகளில் தலைமை பொறியாளர்கள் பிரிவில் உள்ள 3 மூத்த அதிகாரிகள் தலைமையில் போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
அவர்கள் தலைமையில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் எந்திரங்களை கொண்டு சீரமைப்பு பணிகளை இரவு- பகலாக நடத்தி வருகிறார்கள். பெரும்பாலான பணிகள் முடிந்து விட்ட நிலையில் அனைத்து பணிகளையும் நாளைக்குள் (வெள்ளிக் கிழமை) முடிக்க திட்டமிட்டுள்ளனர்.
இதுகுறித்து நீர்வளத்துறை தலைமை பொறியாளர் முத்தையா கூறியதாவது:-
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் சராசரி மழை அளவு 650 மில்லி மீட்டர். ஆனால் டிசம்பர் 15-ந்தேதிக்குள் ஆண்டு மழையில் 75 சதவீதம் பெய்துள்ளது.
டிசம்பர் 17-ந்தேதி நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் மிக அதிகளவு கனமழை பெய்தது.
இந்த மாவட்டத்தில் சராசரியாக 36 சென்டி மீட்டர் பதிவானது. 100 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது இந்த மழை கொட்டி தீர்த்துள்ளது. இதனால் 1½ லட்சம் கன அடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டது.
தாமிரபரணியில் காட்டாற்று வெள்ளம் கீழ்நோக்கி பாய்வதற்கு பதிலாக பக்கவாட்டாகவும், இருபுறமும் கரைபுரண்டு ஓடியது. கரைக்கு அப்பால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் வழக்கமாக ஆற்றில் மழை நீர் வடிந்து செல்வதை தடுத்து ஸ்ரீவைகுண்டத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மொத்தமுள்ள 3 ஆயிரம் குளங்களில் 3-ல் ஒரு பங்கு குளங்கள் மட்டுமே 17-ந்தேதிக்கு முன்பு நிரம்பி இருந்தது. ஆனால் பெரு வெள்ளத்திற்கு பின்னரே அனைத்து குளங்களும் முழுமையாக நிரம்பின.
நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளிலும் அதிக நீர் இருப்ப தால் குளங்களின் உடைப்புகளை சீரமைத்த பிறகு கால்வாய் வழியாக தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- குற்றாலத்தில் இருந்து வரும் சிற்றாறு நீரானது மாயமான்குறிச்சி வழியாக மாறாந்தை குளத்திற்கு செல்கிறது.
- மாயமான்குறிச்சியில் ஒரு மடை அமைக்கப்பட்டு அதன் மூலம் பணிக்கர் ஊரணிக்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டு நிரப்பப்படுகிறது.
ஆலங்குளம்:
ஆலங்குளம் அருகே உள்ள மாயமான்குறிச்சி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் ரூ.14.39 லட்சத்தில் கடந்த 2 மாதத்திற்கு முன்பு ஊரணி அமைக்கப்பட்டது. குற்றாலத்தில் இருந்து வரும் சிற்றாறு நீரானது மகிழ்வண்ணநாதபுரம் அருகே உள்ள நாகல்குளம் வந்தடைந்து அங்கிருந்து மானூர் கால்வாய் மூலம் தண்ணீர் பல கிராமங்களை கடந்து மாயமான்குறிச்சி வழியாக மாறாந்தை குளத்திற்கு செல்கிறது. இந்த மாறாந்தை கால்வாய் வழியாக செல்லும் தண்ணீர் மாயமான்குறிச்சியில் ஒரு மடை அமைக்கப்பட்டு அதன் மூலம் சில மாதங்களுக்கு முன்பு கட்டப்பட்ட பணிக்கர் ஊரணிக்கு கொண்டு வரப்பட்டு நிரப்பபடுகிறது.
இந்த ஊரணியில் தண்ணீர் தேக்குவதால் அருகில் உள்ள சுமார் 100 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் விடிய, விடிய பெய்த மழையால் இந்த ஊரணிக்கு மாறாந்தை கால்வாய் மடையில் இருந்து தண்ணீர் அதிகளவில் வந்துள்ளது. இதனால் ஊரணி கரையின் வடபுறம் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறியது. ஊரணி சுற்றி கட்டப்பட்ட கரையின் சுவர் தரமில்லாததால் உடைப்பு பெரியளவில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் தண்ணீர் அருகில் உள்ள மானூர் கால்வாய் வழியே வீணாக வெளியேறியது. இது குறித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. இதனையடுத்து மாறாந்தை கால்வாய் மடை அடைக்கப்பட்டு உடைந்த ஊரணி கரையை சரி செய்யும் பணி தொடங்கி உள்ளது.ரூ.14 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட ஊரணி கரை தரமில்லாமல் 2 மாதத்தில் உடைந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தரமில்லாமல் ஊரணி கட்டியவர்கள் மீதும் அதற்கு அனுமதி வழங்கிய அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டி அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஊரணிக்கு இருபுறமும் கால்வாய் செல்வதால் கரை உடைப்பால் நடவுக்காக பயிரப்பட்ட நெல் நாற்றுகள் சேதம் ஆகி உள்ளதாக அப்பகுதி விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.
- 2 மாநில நெடுஞ்சாலைகளையும் இணைக் கின்ற இணைப்பு சாலையாக இருப்பதால் அதிகப்படியான கனரக வாகனங்கள் செல்கின்றன.
- காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் உட்பட ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.
மார்த்தாண்டம் :
கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மூசாரி- பாலூர் சாலையானது சுமார் 420 மீட்டர் நீளம் கொண்ட சாலை. இந்த சாலை கருங்கல்- – மார்த்தாண்டம், கருங்கல் –- புதுக்கடை ஆகிய 2 மாநில நெடுஞ்சாலைகளை இணைப்பதும், திப்பிறமலை கிராம ஊராட்சியையும் பாலூர் கிராம ஊராட்சி யையும் இணைப்பதுமான இணைப்பு சாலையாகும்.
2 மாநில நெடுஞ்சாலைகளையும் இணைக் கின்ற இணைப்பு சாலையாக இருப்பதால் அதிகப்படியான கனரக வாகனங்கள் செல்கின்றன. நீண்டகாலமாக இந்த சாலை செப்பனிடாத காரணத்தினாலும், கடந்த வருடம் பெய்த பெரும் கனமழையினாலும் பழுதடைந்து மிகவும் மோசமான நிலையில் கணப்பட்டது. இதனால் இந்த சாலையில் பொதுமக்கள் நடந்து செல்வதற்கும், வாகனங்களில் செல்வ தற்கும் முடியாத நிலையில் அவதிப்பட்டனர்.
எனவே இந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று இப்பகுதி மக்கள் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ விடம் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து மூசாரி – பாலூர் செல்லும் சாலையை நபார்டு மற்றும் கிராமச்சாலைகள் துறையின் மூலமாக தேர்வு செய்து அரசாணை பிறப்பித்து தரம் உயர்த்தி உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் தொடர்ந்து மனுக்கள் அளித்து கோரிக்கை வைத்து வந்தார்.
இதனையடுத்து இந்த சாலையை கிள்ளியூர் ஊராட்சி ஒன்றியத்திலிருந்து நெடுஞ்சாலை துறைக்கு ஒப்பளிப்பு செய்யப்பட்டது. நெடுஞ்சாலை நபார்டு மற்றும் கிராம சாலை அலகினால் மாவட்ட இதர சாலையாக தரம் உயர்த்தி ரூ.30 லட்சத்திற்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது.
இப்பணிக்கான மதிப்பீடு தயாரிக்கும் போது பொது மக்களால் சாலையின் மொத்த அகலத்திற்கும் ஓடுதளம் அமைக்க கோரப்பட்டதை தொடர்ந்து 3.75 மீட்டர் தார் தளமும் அதன் இரு புறங்களிலும் பாவு தளமும் அமைத்திட ரூ.80 லட்சம் வரை தேவைப்பட்டதால் இப்பணிக்கான கூடுதல் தொகை ரூ.50 லட்சம், கூடுதலாக ரூ.80 லட்சத்திற்கு திருத்திய நிர்வாக அனுமதிக்கான கருத்துரு தலைமை பொறியாளர் நெடுஞ்சாலை நபார்டு மற்றும் கிராம சாலைகள் சமர்பிக்கப்பட்டு தமிழ்நாடு அரசால் ரூ.80 லட்சம் திருத்தி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பால்வளத்துறை அமைச்சர் மற்றும் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் சேர்த்து சாலை சீரமைக்கும் பணியினை தொடங்கி வைத்தனர். இதனையடுத்து சாலை சீரமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த சாலை சீரமைக்கும் பணியை ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. திடீரென பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது கிள்ளியூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராஜசேகரன், பாலூர் ஊராட்சி காங்கிரஸ் தலைவர் சுரேஷ் கியூபர்ட் ராஜ், திப்பிறமலை ஊராட்சி காங்கிரஸ் தலைவர் பிறைட், கிள்ளியூர் ஊராட்சி ஒன்றிய துணை பெருந்தலைவர் லெனின் குமார், காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் உட்பட ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.
- தண்டவாள பகுதிகளில் ராட்சத கிரேன் மூலமாக பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
- பணிகள் தொடங்கிய பிறகே ரெயில் சேவையில் எந்த மாதிரியான பாதிப்புகள் ஏற்படும் என்கிற முழுமையான தகவல் வெளியிடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை:
சென்னையில் மழைக்காலங்களில் வெள்ளம் தேங்குவதை தடுப்பதற்காக வெள்ளத் தடுப்பு பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதே நேரத்தில் ரெயில் நிலைய பாலங்களையொட்டிய பகுதிகளில் ரெயில்வே பாதுகாப்பு, போக்குவரத்து உள்ளிட்ட பிரச்சனைகளால் மழைநீர் வடிகால் பணிகளை முடிப்பதில் சவால்கள் இருந்து வந்தன. ரெயில்வே தண்டவாளங்களின் குறுக்கே மழைநீர் செல்லும் வகையில் வடிகால் அமைக்கும் பணிகளுக்காக திட்டமிடப்பட்டிருந்தது.
இதற்காக 25-க்கும் மேற்பட்ட இடங்களில் அடையாளம் காணப்பட்டன. இந்த இடங்களில் தண்டவாளத்துக்கு கீழே மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொள்வது எப்படி? என்கிற ஆய்வும் மேற்கொள்ளப்பட்டது.
இந்த பணிகளை தொடங்குவதற்கு ரெயில்வே நிர்வாகத்துடன் உரிய முன் அனுமதி பெற வேண்டியது இருந்ததால் அதற்கான பணிகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் சென்னை மாநகராட்சி மற்றும் அரசு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் ரெயில்வே நிர்வாகத்துடன் பேசி தண்டவாளத்துக்கு கீழ் மழைநீர் வடிகால் பணிகளை அமைப்பது தொடர்பான அனுமதியை கேட்டுப்பெற்றுள்ளனர்.
இதன்படி எழும்பூர் மற்றும் கணேசபுரம் ஆகிய பகுதிகளில் தண்டவாளத்தின் ஒருபுறத்தில் இருந்து இன்னொரு புறத்திற்கு மழைநீரை கொண்டு செல்வதற்கான வடிகால் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.
இந்த பணிகள் அடுத்த வாரம் தொடங்கப்பட வாய்ப்பு இருப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் செயலர் கார்த்திகேயன், மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் மழைநீர் வடிகால் அமைக்கும் இடங்களில் ஆய்வு மேற்கொண்டு உள்ளனர். இதை தொடர்ந்து இந்த பணிகள் தொடங்கி தொடர்ச்சியாக நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளது.
எழும்பூர் ரெயில் நிலையம் அருகே உள்ள காந்தி இர்வின் சாலை பாலம் பகுதியில் தண்டவாளத்தின் குறுக்கே மழைநீர் வடிகால் பணிகள் அமைக்கும் பகுதியில் சுற்றியுள்ள இடங்களில் பணிகள் 90 சதவீத அளவுக்கு முடிவடைந்துள்ளன. தண்டவாளத்தின் குறுக்கே சுமார் 50 மீட்டரில் தூர்வாரும் கால்வாய் அமைக்கப்பட வேண்டும்.
இந்த பணிகள் இன்னும் சில தினங்களில் தொடங்கப்பட வாய்ப்பு உள்ளது. மழை வெள்ளப் பாதிப்பை தடுக்க கட் மற்றும் கவர் என்கிற தொழில்நுட்ப முறையில் வாய்க்கால் அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் மழைநீர் தேங்காமல் நிரந்தர தீர்வு காணப்படும்.
இதற்காக தண்டவாள பகுதிகளில் ராட்சத கிரேன் மூலமாக பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதனால் கடற்கரை மின்சார ரெயில் சேவையில் கடும் பாதிப்பு ஏற்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
கடற்கரையில் இருந்து இயக்கப்படும் மின்சார ரெயில்கள் பணிகள் தொடங்கி முடியும் வரை எழும்பூரில் இருந்து இயக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் எழும்பூர் முதல் சென்னை கடற்கரை வரை மின்சாரம் ரெயில் சேவை தடைபட உள்ளது.
அதே போன்று எக்ஸ்பிரஸ் ரெயில்களின் வேகமும் குறைக்கப்பட வாய்ப்பு உள்ளது. இதனால் ரெயில்கள் புறப்படும் நேரத்தில் 6 நிமிடங்கள் வரை தாமதம் ஏற்படும்.
இதே போன்று கணேச புரம் பகுதியிலும் தண்டவாளத்தின் குறுக்கே மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற இருப்பதால் அப்பகுதியிலும் ரெயிலின் வேகம் குறைக்கப்பட்டு ரெயில் சேவையில் பாதிப்பு ஏற்பட உள்ளது.
புறநகர் ரெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையும் தடைபட வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் இந்த பணிகள் தொடங்கிய பிறகே ரெயில் சேவையில் எந்த மாதிரியான பாதிப்புகள் ஏற்படும் என்கிற முழுமையான தகவல் வெளியிடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- அமைச்சர் மனோ தங்கராஜ்- ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தனர்
- தமிழ்நாடு அரசால் ரூ.80 லட்சம் திருத்திய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
கன்னியாகுமரி :
கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மூசாரி-–பாலூர் சாலையானது சுமார் 420 மீட்டர் நீளம் கொண்டது. இந்த சாலை கருங்கல்-– மார்த்தாண்டம், கருங்கல்-–புதுக்கடை ஆகிய 2 நெடுஞ்சாலைகளை இணைப்பதும், திப்பிறமலை கிராம ஊராட்சியையும், பாலூர் கிராம ஊராட்சியையும் இணைப்பதுமான இணைப்பு சாலையாகும்.
இந்த சாலை 2 மாநில நெடுஞ்சாலைகளையும் இணைக்கின்ற இணைப்பு சாலையாக இருப்பதால் அதிகப்படியான கனரக வாகனங்கள் செல்கின்றன. நீண்ட காலமாக இந்த சாலை செப்பனிடாத காரணத்தினாலும், கடந்த வருடம் பெய்த மழையினாலும் பழுதடைந்து மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டது.
இந்த சாலையில் பொதுமக்கள் நடந்து செல்வதற்கும், வாகனங்களில் செல்வதற்கும் முடியாத நிலை இருந்தது. இதனால் சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ.விடம் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து அவர் நபார்டு மற்றும் கிராம சாலைகள் துறையின் மூலமாக உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் தொடர்ந்து மனுக்கள் அளித்து கோரிக்கை வைத்து வந்தார்.
இதனையடுத்து இந்த சாலையை கிள்ளியூர் ஊராட்சி ஒன்றியத்திலிருந்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் நெடுஞ்சாலை துறைக்கு ஒப்படைப்பு செய்யப் பட்டதா கும். நெடுஞ்சாலை நபார்டு மற்றும் கிராம சாலை அலகினால் மாவட்ட இதர சாலையாக தரம் உயர்த்தி நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது. தொடர்ந்து தமிழ்நாடு அரசால் ரூ.80 லட்சம் திருத்திய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதனையடுத்து சாலை சீரமைக்கும் பணியை அமைச்சர் மனோதங்கராஜ் மற்றும் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் கிள்ளியூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராஜசேகரன், கிள்ளியூர் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் கோபால், ஊராட்சி ஒன்றிய தலைவர் கிறிஸ்டல் ரமணிபாய் மற்றும் காங்கிரஸ், தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட ஏராள மானோர் கலந்துகொண்டனர்.
- பூங்காவில் 500-க்கும் மேற்பட்ட வகையான தாவரங்கள் வளர்க்கப்படுகின்றன.
- பூங்காவிற்கு வரும் காதல் ஜோடிகள் எல்லைமீறி நடந்து கொள்கிறார்கள்.
செம்மொழிப் பூங்கா சென்னை நகரின் மைய பகுதியில் அண்ணா மேம்பாலம் அருகில் கதீட்ரல் ரோடு-அண்ணாசாலை சந்திப்பில், அமெரிக்க தூதரகத்திற்கு எதிரில் அமைந்து உள்ளது. இது 8 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்ட தாவரவியல் பூங்கா ஆகும்
தமிழக அரசின் தோட்டக் கலைத்துறைக்கு சொந்தமான அந்த இடத்தில் முன்பு டிரைவ்-இன் உட்லண்ட்ஸ் ஓட்டல் இருந்தது. அதில் தமிழ்நாடு அரசின் தோட்டக்கலை மற்றும் வேளாண் பொறியியல் துறை சார்பில் : 'செம்மொழி பூங்கா' உருவாக்கப்பட்டது.
இந்த பூங்கா 2010- ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது. இது சென்னை மாநகரின் முதல் தாவரவியல் பூங்கா ஆகும்.
செம்மொழிப் பூங்காவில் 100 கார்கள் மற்றும் 500 இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வசதி உள்ளது. இங்கு பொது மக்களுக்கு நுழைவு கட்டணமாக ரூ.25 வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த பூங்காவில் 500-க்கும் மேற்பட்ட வகையான தாவரங்கள் வளர்க்கப்படுகின்றன. மேலும் பூங்காவில் அரிய வகை தாவரங்களும் உள்ளன. மருத்துவ, நறுமண மூலிகைகள், மற்றும் வெளிநாட்டு தாவரங்கள் ஏராளம் உள்ளன.
இந்த பூங்காவிற்கு தினமும் காலை, மாலை நேரங்களில் பொழுது போக்குக்காக நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வருகிறார்கள். இங்கு பலர் நடைபயிற்சியும் செய்து வருகிறார்கள். பொது மக்களை கவரும் வகையில் அமைந்து உள்ள இந்த பூங்காவில் ஏராளமான மரங்கள், மற்றும் செடிகள் உள்ளன. பூங்காவில் உள்ள செயற்கை நீரூற்றுகள் சிறு வர், சிறுமிகளை கவர்ந்து வந்தது.
இந்தநிலையில் தற்போது சரிவர பராமரிப்பு இல்லாதால் அலங்கோலமாக காட்சிஅளிக்கிறது. இங்குள்ள 3 முக்கிய அழகிய இசை நீரூற்றுகள் பழுதடைந்து தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கின்றன. சிறுவர் விளையாட்டு உபகரணங்கள் துருபிடித்து காணப்படுகின்றன. மேலும் நடைபாதையில் உள்ள கற்கள் பெயர்ந்து பள்ளம், மேடுகளாக உள்ளன.
இந்த பூங்காவில் நடைபயிற்சிக்கு வரும் பொதுமக்கள் நடைபயிற்சி செய்தபின் அமருவதற்கு போதுமான இருக்கைகள் இல்லை. எனவே புதிதாக கூடுதல் இருக்கைகள் அமைக்க வேண்டும்.
இப்பூங்காவில் நாய்கள் தொல்லையும் உள்ளது. இதனால் நடைபயிற்சிக்கு வருபவர்கள் அச்சப்படுகிறார்கள். தெரு நாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் இங்கு பார்வையாளர்கள், நடைபயிற்சி செல்வோர், காதலர்கள் என ஆயிரக்கணக்கானோர் தினமும் இந்த பூங்காவுக்கு வந்து செல்கிறார்கள். இந்த பூங்காவிற்கு வரும் காதல் ஜோடிகள் எல்லைமீறி நடந்து கொள்கிறார்கள். ஆங்காங்கே காதல்ஜோடிகள் மறைவான இடங்களில் அமர்ந்து கொண்டு காதல் விளையாட்டுக்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதனால் நடை பயிற்சிக்கு வரும் பொது மக்களுக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. எனவே இந்த பூங்காவுக்கு வரும் காதல் ஜோடி களின் அத்துமீறலை தடுக்க வேண்டும்.
இது குறித்து பொது மக்கள் கூறியதாவது:- சென்னையின் முக்கிய பூங்காவாக செம்மொழிப் பூங்கா திகழ்ந்து வருகிறது. தற்போது இந்த பூங்கா சரிவர பராமரிப்பு இல்லாமல் உள்ளது. இதனால் காலை, மாலை நேரங்களில் நடை பயிற்சிக்கு வரும் பொது மக்கள் ஏராளமானோர் பாதிக்கப்படுகிறார்கள்.
எனவே பொதுமக்கள் வசதிக்காக உரிய அடிப்படைவசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும். பூங்காவில் உள்ள பல்வேறு குறைகளை நிவர்த்தி செய்யவேண்டும். கழிப்பறைகள் சுத்தம் இல்லாமல் காணப்படுகிறது.
இதனையும் உடனடியாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அழகிய இசை நீரூற்றுகள் தண்ணீர் இல்லாமல் பராமரிப்புகள் செய்யப்படாமல் உள்ளது. பூங்காவின் நுழைவு பகுதியில் செடிகள், புற்கள் பராமரிப்பு செய்யப்படாததால் காய்ந்த நிலையில் உள்ளன. பூங்காவின் பல்வேறு அவல நிலையை போக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- சென்னை நகர மக்களின் முக்கிய பொழுதுபோக்கு இடங்களில் ஒன்று கிண்டி சிறுவர் பூங்கா.
- பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்து உள்ள கிண்டி சிறுவர் பூங்காவை சீரமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
சென்னை நகர மக்களின் முக்கிய பொழுதுபோக்கு இடங்களில் ஒன்று கிண்டி சிறுவர் பூங்கா. இது சுமார் 22 ஏக்கரில் பரந்து விரிந்து உள்ளது.
இங்குள்ள பாம்பு பண்ணை, பறவைகள், முதலை பண்ணை உள்ளிட்டவற்றை பார்வையாளர்கள் ரசித்து செல்கிறார்கள். ஆண்டுக்கு 8 லட்சம் முதல் 9 லட்சம் பார்வையாளர்கள் வந்து செல்கிறார்கள்.
பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்து உள்ள கிண்டி சிறுவர் பூங்காவை சீரமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக ரூ.20 கோடி நிதி ஒதுக்கி உள்ளனர்.
வன உயிரினங்களின் அமைவிடங்கள், இயற்கையாக காடுகளில் உள்ளது போல் உருவாக்கப்பட உள்ளது.
மேலும் சிறுவர்களுக்கான நூலகம், விழா அரங்கம், பார்வையாளர்களுக்கான வசதி மேம்பாடு, பறவைகள், விலங்குகளின் சிறப்பம்சங்கள், அவற்றின் வாழ்வியல் முறை உள்ளிட்டவற்றை அறிய அவற்றின் இருப்பிடங்களின் அருகில் கியூ ஆர் கோடு அமைத்தல், புதிய உள் கட்டமைப்பு வசதி, டிக்கெட் கவுண்டர், உணவகம், வாகன நிறுத்தும் இடம், உலகத்தரத்தில் அரங்கங்கள், விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட இருக்கிறது.
இந்த சீரமைப்பு பணிகள் அடுத்த வாரம் தொடங்கப்படும் என்று தெரிகிறது. இந்த சீரமைப்பு பணி தொடர்ந்து 6 மாதங்கள் நடைபெற இருக்கிறது. எனவே கிண்டி சிறுவர் பூங்கா 6 மாதங்கள் மூடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளன.
இது குறித்து பூங்கா அதிகாரி ஒருவர் கூறும்போது, "கிண்டி சிறுவர் பூங்கா ரூ.20 கோடியில் சீரமைக்கப்பட உள்ளது. இயற்கை தோட்டங்கள், நிரூற்றுகள், விலங்குகள் பற்றி அறிய அதன் இருப்பிடத்தில் கியூ ஆர் கோடு அமைக்கப்பட உள்ளது. சீரமைப்பு பணி நடைபெறுவதையடுத்து 6 மாதங்கள் கிண்டி சிறுவர் பூங்கா மூடப்படும்" என்றார்.
- சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை அங்கிருந்து இடமாற்றம் செய்வதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
- பயோமெட்ரிக் முறையில் கணக்கெடுப்பு பணியை அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கினர்.
சென்னை:
சென்னையில் பக்கிங்காம் கால்வாயை சீரமைக்க அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்காக பக்கிங்காம் கால்வாயில் நீர்வழிப்பாதையில் கரையோரம் வசிப்பவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த முடிவு செய்துள்ளனர். இதற்கான முதல்கட்ட திட்ட அறிக்கையை நீர்வளத் துறையினர் தயாரித்து உள்ளனர்.
இதைத் தொடர்ந்து முதல் கட்டமாக சிவானந்தா சாலை-டாக்டர் ராதா கிருஷ்ணன் சாலை இடையே 2.9 கி.மீட்டர் தூரத்திற்கு பக்கிங்காம் கால்வாயை சீரமைக்க முடிவு செய்து ஆரம்பக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன.
இதேபோல் நீர்வளத் துறையின் 2023-24 ம் ஆண்டின் கொள்கை குறிப்பின்படி பக்கிங்காம் கால்வாய் மற்றும் அதனுடன் தொடர்புடைய கால்வாய், அடையாறு கூவம் ஆறுகளில் பாயும் வடிகால் வாய்களில் சீரமைப்பு மற்றும் விரிவான மறுசீரமைப்புக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
இதற்கு ரூ.1,281 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. இதில் நீர்வழிப்பாதையை தூர் வாரி சீரமைத்தல், படகு போக்குவரத்து மையம் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற இருக்கின்றன.
இதற்கிடையே பக்கிங்காம் கால்வாய் கரையோரம் வசிக்கும் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை அங்கிருந்து இடமாற்றம் செய்வதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதனால் கால்வாய் கரையோரத்தை சீரமைக்கும் பணி தொடங்குவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது.
மேலும் பக்கிங்காம் கால்வாய் கரையோரம் வசிப்பவர்கள் காலி செய்யும் போது அவர்களுக்கு அதே பகுதியில் மாற்று இடம் கொடுத்து குடியமர்த்த வேண்டும் அல்லது ஏற்கனவே வசித்த இடத்தில் இருந்து 5 கி.மீட்டர் தூரத்திற்குள் குடிய மர்த்த வேண்டும் என்பது பொதுமக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.
ஆனால் கால்வாய் கரையோரம் வசிப்பவர்களை அப்புறப்படுத்தும் போது அவர்களுக்கு மாற்று இடம் அருகில் ஒதுக்கப்படவில்லை என்று தெரிகிறது.
இதன் காரணமாக பக்கிங்காம் கால்வாய் கரையோரம் வசிப்பவர்கள் அப்புறப்படுத்துவது தொடர்பாக என்ன மாதிரியான முடிவு எடுப்பது என்று அதிகாரிகள் தவித்து வருகிறார்கள்.
பக்கிங்காம் கால்வாய் கரையோரம் உள்ள முக்கிய இடங்களான விக்டோரியா ஹாஸ்டல், சிவராஜபுரம், சுங்குவார் தெரு, மட்டன் குப்பம், ரோட்டரி நகர், நீலம்பாஷா தர்கா உள்ளிட்ட இடங்களில் பல ஆண்டுகளாக ஏராளமானோர் வசித்து வருகிறார்கள். இந்த இடமாற்றம் அவர்களை கவலை அடையச் செய்து உள்ளது. இதுவரை எத்தனை குடும்பங்கள் இதில் பாதிக்கப்பட உள்ளது என்று உறுதியாக அறிவிக்கப்படவில்லை.
கடந்த 2020-ம் ஆண்டு அரசின் அறிவிப்பின்படி 15 ஆயிரம் குடும்பத்தினர் பாதிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டது. கடந்த 2020-21- ம் ஆண்டிற்கான தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கொள்கை குறிப்பில் இந்த எண்ணிக்கை 17 ஆயிரத்து 564 என்று குறிப்பிடப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பக்கிங்காம் கால்வாய் கரையோரம் வசிப்பவர்கள் பற்றி பயோமெட்ரிக் முறையில் கணக்கெடுப்பு பணியை அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கினர். ஆனால் இதற்கு அங்கு வசிப்பவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் பயோமெட்ரிக் கணக்கெடுப்புக்கு தகவல்கள் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.
இதைத் தொடர்ந்து இந்த கணக்கெடுப்பும் இப்போது கிடப்பில் போடப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக அப்பகுதி மக்கள் கூறும்போது "மறு குடியமர்த்தலுக்கு ஒதுக்கப்பட்ட இடம் எங்கே? என்று அதிகாரிகள் இதுவரை தெரிவிக்கவில்லை. நாங்கள் தற்போது வசிக்கும் இடம் அருகே அல்லது 5 கி. மீட்டர் தூரதிற்குள் குடியமர்த்த வேண்டும். அப்படியானால்தான் எங்களது வாழ்வாதாரம் பாதிக்காது" என்றனர்.
லாக் நகரை சேர்ந்த தொழிலாளி ஒருவர் கூறும் போது, "எனது குடும்பம் பல தலைமுறைகளாக இங்கு வசிக்கிறது. எனக்கும் எனது மனைவிக்கும் வாழ் வாதாரம் இந்த பகுதியை சுற்றியே உள்ளது. குழந்தைகள் அருகில் உள்ள பள்ளியில் படிக்கிறார்கள். நாங்கள் எப்படி நீண்ட தூரத்திற்கு செல்ல முடியும். மேலும் மறு குடியமர்த்துதல் தொடர்பாக அதிகாரிகள் இதுவரை எந்த தெளிவான முடிவும் எங்களுக்கு தெரிவிக்கவில்லை" என்றனர். சிவராஜபுரத்தை சேர்ந்த சரவணன் என்பவர் கூறும் போது, "பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு வீடு கட்டி கொடுக்க அருகிலேயே அரசுக்கு சொந்தமான காலி இடம் உள்ளது. ஆனால் அது வேறு துறைக்கு சொந்தமானது என்று கூறுகிறார்கள். மறுகுடியமர்த்தும் இடங்கள் எர்ணாவூர் மற்றும் கார்கில் நகர் என்று தெரிகிறது. அங்கு நாங்கள் செல்ல நிர்பந்திக்கப்படலாம் என்பதால் பயப்படுகிறோம்" என்றார்.
அப்பகுதியை சேர்ந்த மற்றொருவர் கூறும்போது, "மறுகுடியமர்த்தலுக்கு தேவையான இடத்தை முடிவு செய்ய குடும்பங்களின் எண்ணிக்கை மட்டும் போதுமானது. ஆனால் பயோமெட்ரிக் பதிவு மற்றும் படிவங்களில் கையெழுத்திட ஏன் வற்புறுத்த வேண்டும் மறுகுடியமர்த்தலுக்கான இடங்கள் குறித்து அதிகாரிகள் எந்த தகவலையும் தெரிவிக்காத நிலையில் இது சந்தேகத்தை எழுப்பி உள்ளது" என்றார்.
இதற்கிடையே பக்கிங்காம் கால்வாய் கரை யோரத்தில் வசிப்பவர்கள் காலி செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் பல்வேறு போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக சென்னை மத்திய மாவட்ட மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் செயலாளர் செல்வம் கூறும்போது, "பரம்பரை, பரம்பரையாக பக்கிங்காம் கால்வாய் கரையோரம் வசிப்பவர்கள் இடமாற்றம் செய்ய வேண்டியதன் அவசியம் என்ன? இது அவர்களுக்கான இடம் கிடையாதா?"
கால்வாய் அருகில் வசிக்கும் மக்களின் விருப்பத்திற்கு மாறாக அவர்களிடம் பயோமெட்ரிக் தகவல்களை அதிகாரிகள் சேகரிக்க தொடங்கி உள்ளனர். பொது மக்களும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் லாக் நகர் பகுதியில் பயோமெட்ரிக் தகவல்கள் சேகரிக்கும் பணியை அதிகாரிகள் கைவிட்டனர். காலம், காலமாக வாழும் மக்களின் வாழ்விட உரிமையை பறிக்கக் கூடாது. அவர்களை மாற்று இடத்தில் நீண்ட தூரத்தில் குடியமர்த்தும் போது வாழ்வாதாரம் பாதிக்கும்" என்றார்.
- பேருந்து நிலையத்தின் தரைதளம் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
- புதிய தரைதளம் அமைக்க 83 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் திட்டத்திற்க்கு அடிக்கல் நாட்டினார்.
பாலக்கோடு,
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பேருந்து நிலையத்தில் பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி தலைமையில் புதிய தரைத்தளம் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை செய்து தொடங்கி வைக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு மாநில விவசாய அணி துணை செயலாளர் சூடப்பட்டி சுப்ரமணி முன்னிலை வகித்தார்.பாலக்கோடு பேருந்து நிலையம் கடந்த சில வருடங்களாக சிமெண்ட் தரை தளம் பெயர்ந்து குண்டும் குழியுமாக காணப்பட்டு வந்தது.
இதனால் வாகனங்களின் போக்குவரத்திற்க்கு பெரும் சிரமம் ஏற்பட்டது. மழை காலங்களில் பள்ளங்களில் தேங்கி நிற்கும் தண்ணீரானது பேருந்து செல்லும் போது பொது மக்களின் மேல் படுவதால் பொதுமக்களும், பயணிகளும் பெரும் பாதிப்படைந்து வந்தனர்.
பேருந்து நிலையத்தின் தரைதளம் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
கோரிக்கையை ஏற்று கடந்த 2-ந் தேதி வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் புதிய தரைதளம் அமைக்க 83 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் திட்டத்திற்க்கு அடிக்கல் நாட்டினார்.
அதனை தொடர்ந்து நேற்று பாலக்கோடு பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி புதிய தரைத்தளம் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் கவுன்சிலர் மோகன் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
திருப்பூர்:
சென்னை - அரக்கோணம் இடையே ெரயில் பாலம் சீரமைப்பு பணிகள் நடப்பதால் தன்பாத் மற்றும் ரப்திசாகர் எக்ஸ்பிரஸ் ெரயில்கள் சென்னை செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து தெற்கு ெரயில்வே வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை - அரக்கோணம் இடையே ெரயில் பாலம் மறுகட்டமைக்கும் பணி நடக்கிறது.இதனால் கேரளா மாநிலம் ஆலப்புழாவில் இருந்து ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்துக்கு இயக்கப்படும் தன்பாத் எக்ஸ்பிரஸ் இன்று முதல் 10ந் தேதி வரை 7நாட்களுக்கு சென்னை அருகேயுள்ள பெரம்பூர் நிலையத்தில் நின்று செல்லும். சென்னை சென்ட்ரல் நிலையத்துக்குச் செல்லாது.அதேபோல கொச்சுவேலி - இந்தூர் இடையே இயக்கப்படும் அஹில்யா நகரி அதிவிரைவு ெரயில் பெரம்பூர் மற்றும் பேசின் பிரிட்ஜ் ஆகிய நிலையங்களில் மட்டுமே நிற்கும். சென்னை சென்ட்ரலுக்கு செல்லாது.
கொச்சுவேலி - கோரக்பூர் ரப்திசாகர் எக்ஸ்பிரஸ், ஏப்ரல் 5 மற்றும் 9 ஆகிய தேதிகளிலும், கொச்சுவேலி - கோர்பா சூப்பர் பாஸ்ட் ஏப்ரல் 6 மற்றும் 10 ஆகிய தேதிகளிலும், எர்ணாகுளம் - பரூனி எக்ஸ்பிரஸ் ஏப்ரல் 7-ந் தேதியும் சென்னைக்கு செல்லாது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்